கரூர் மாவட்ட பகுதியில் பரவலாக மழை
கரூர் மாவட்ட பகுதியில் பரவலாக மழை பெய்தது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கரூரில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் மாலை நேரத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. பின்னர் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது.
இந்த மழையானது கரூர், தாந்தோணிமலை உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் வரை பெய்தது. இந்த திடீர் மழையால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர்.
நொய்யல், மரவாபாளையம், புன்னம் சத்திரம், புன்னம், வேட்டமங்கலம், சேமங்கி, திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், திருக்காடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. இதனால் கூலி வேலைக்கு சென்று விட்டு நடந்து சென்றவர்கள், சாலையோரக்கடைக்காரர்கள் அவதி அடைந்தனர். வேலாயுதம்பாளையம்,புகழூர், காகிதபுரம், தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், மண்மங்கலம், கடம்பங்குறிச்சி ஆகிய பகுதிகளில் நேற்று மாலை சுமார் 1½ மணி நேரம் பலத்த மழை பெய்ந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. குளித்தலை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நேற்று மாலை சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக தேங்கி நின்ற தண்ணீரில் வாகனங்கள் மிதந்து சென்றன. சாலையோர வியாபாரிகள் சற்று பாதிக்கப்பட்டனர். பிறகு மழை குறைய தொடங்கியது. அவ்வப்போது மழை தூறிக் கொண்டே இருந்தது.