குமரியில் பரவலாக மழை


குமரியில் பரவலாக மழை
x

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1½ அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1½ அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பேரிடர் மீட்புக்குழு

குமரி மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டது. மேலும் பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டு தயாராக இருந்தனர்.

ஆனால் மாவட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. கடந்த 3 நாட்களாக சாரல் மழையாகவும், நீர்ப்பிடிப்பு உள்ளிட்ட சில இடங்களில் கனமழையாகவும் பெய்தது.

நீர்மட்டம் உயர்வு

இதனால் அனைத்து அணைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் தலா 1½ அடி உயா்ந்தது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 2,129 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 253 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 1,591 கன அடி தண்ணீர் வந்தது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 93 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 147 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு வினாடிக்கு 11 கன அடியும், முக்கடல் அணைக்கு வினாடிக்கு 11.5 கன அடி தண்ணீரும் வந்தது. முக்கடல் அணையில் இருந்து வினாடிக்கு 8.6 கன அடி தண்ணீர் குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

மழை அளவு

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 24.8, புத்தன் அணை- 24.8, சிற்றார் 1- 11.6, சிற்றார் 2- 17.8, மாம்பழத்துறையாறு- 10.2, முக்கடல் அணை- 5.4, பூதப்பாண்டி- 10.6, களியல்- 14.7, கன்னிமார்- 12.2, குழித்துறை- 14.8, மயிலாடி- 1.8, நாகர்கோவில்- 3, சுருளக்கோடு- 14.2, தக்கலை- 8.4, குளச்சல்- 4.2, இரணியல்- 4, பாலமோர்- 22.4, திற்பரப்பு- 17.4, ஆரல்வாய்மொழி- 1.2, கோழிப்போர்விளை- 15.4, அடையாமடை- 5, குருந்தங்கோடு- 3.6, முள்ளங்கினாவிளை- 8.6, ஆனைக்கிடங்கு- 12 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 34.6 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

மழை குறைவு

குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 708 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது இயல்பாக பெய்யும் மழையை விட அதிகமாக உள்ளது. அதே சமயத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைவான அளவில் மழை பெய்துள்ளது.

அதாவது கடந்த 2021-ம் ஆண்டில் முதல் 8 மாதங்களில் மட்டும் 1,233 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தரைப்பாலம் மூழ்கியது

மலைப்பகுதிகளில் பெய்த மழையால் மோதிரமலை-குற்றியாறு இடையேயான தரைப்பாலம் மீண்டும் மூழ்கியது. பாலத்தை மூழ்கடித்தப்படி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. ஆனாலும், அந்த வழியாக பொதுமக்கள் ஆபத்தான நிலையில் வாகனங்களிலும், நடந்தும் சென்றனர்.

தொடர் மழையால் பேச்சிப்பாறை, களியல், ஆறுகாணி, பத்துகாணி, திற்பரப்பு, சுருளகோடு, பொன்மனை உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது.மழையால் திற்பரப்பு அருவியில் அதிக அளவில் வௌ்ளம் கொட்டுகிறது. அதே வேளையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

குளச்சல் கடல் பகுதியில் தொடரும் சூறைக்காற்று காரணமாக வள்ளம், கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. படகுகள் பாதுகாப்பாக மணற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளன.

நேற்று 4-வது நாளாகவும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களும் உடனடியாக கரை திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி விசைப்படகுகளில் மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பி வந்தனர். இந்தநிலையில் நேற்று அனைத்து விசைப்படகுகளும் குளச்சல் மீன்பிடி துறைமுகத்துக்கு திரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story