மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை: வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்


மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை:  வைகை அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது

தேனி

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு மொத்தம் 120 நாட்கள் தண்ணீர் திறக்கப்படும். அதில் முதல் 75 நாட்கள் தொடர்ச்சியாகவும், அடுத்து வரும் நாட்களில் முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும். அதன்படி கடந்த ஜூன் முதல் வாரத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தின் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் பாசனக்கால்வாய் வழியாக திறக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே வைகை அணையில் இருந்து தற்போது மதுரை மாநகர் மற்றும் சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு மட்டும் வினாடிக்கு 69 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்வது நிற்கும் வரையில் தண்ணீர் திறக்க முடியாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்து உள்ளதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 59.38 அடியாக உள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 1,546 கன அடியாக இருந்தது.


Next Story