நாகை மாவட்டத்தில் பரவலாக மழை


நாகை மாவட்டத்தில் பரவலாக மழை
x

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் நடவுசெய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி சென்னை, கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்பட 18 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

மேலும் செல்லூர், வடகுடி, பாலையூர் உள்ளிட்ட இடங்களில் நடவு செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பயிர்கள் சேதமடையும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகை 0.80, திருப்பூண்டி 5.20, திருக்குவளை 8.50, தலைஞாயிறு 3.20, வேதாரண்யம் 2.20.

திட்டச்சேரி

திருமருகல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை ெபய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று திட்டச்சேரி, திருமருகல், கட்டுமாவடி, அண்ணாமண்டபம், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், புத்தகரம், ஏனங்குடி, போலகம், சீயாத்தமங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல வாய்மேடு, வேதாரண்யம், சிக்கல், நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் கீழ்வேளூர், தேவூர், இரட்டை மதகடி, வெண்மணி, கிள்ளுக்குடி, மணலூர், காக்கழனி, ஆந்தக்குடி, சிகார், ஆதமங்கலம், வடக்காலத்தூர், பட்டமங்கலம், இலுப்பூர், கூத்தூர், ‌நீலப்பாடி, குருமனாங்குடி, ஒர்குடி, ஒக்கூர், வெங்கிடங்கால், ஆவராணி, புதுச்சேரி, ஆழியூர், சிக்கல், பொரவச்சேரி சங்கமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கீழ்வேளூர் ஒன்றியம் கிள்ளூக்குடி, மாணலூர், கூரத்தாங்குடி‌ மோகனூர், சாட்டியக்குடி பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் தாளடி பருவத்திற்கு நேரடி நெல் விதைப்பு செய்திருந்தனர். தற்போது பெய்த மழையில் வயலில் தெளிக்கப்பட்டிருந்த நெல் விதைகள் மழை நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வயலில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

வேளாங்கண்ணி

வேளாங்கண்ணியில் பெய்து வரும் தொடர் மழையிலும் பேராலயத்திற்கு ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வேளாங்கண்ணி கடற்கரையில் மழை பெய்த போதும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். வேளாங்கண்ணி கடலில் அவ்வபோது சீற்றம் ஏற்பட்டது.


Related Tags :
Next Story