புதுக்கோட்டையில் பரவலாக மழை


வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுக்கோட்டையில் பரவலாக மழை பெய்தது. ரெயின் கோட், குடைகள் விற்பனை களைகட்டியது.

புதுக்கோட்டை

பரவலாக மழை

தெற்கு வங்க கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதலே ஆங்காங்கே மழை பெய்தது. புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை பரவலாக பெய்தபடி இருந்தது.

நேற்று காலை 6 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையும் தொடர்ந்து இடைவிடாமல் பெய்தது. மழையில் நனையாமல் இருக்க பொதுமக்கள் பலர் குடையை பிடித்தபடி சென்றனர். சிலர் மழையில் நனைந்தபடி இருசக்கர வாகனங்களில் சென்றனர். சிலர் ரெயின் கோட் அணிந்தபடி சென்றதையும் காணமுடிந்தது.

ரெயின் கோட் விற்பனை

கடைவீதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மழையில் நனைந்தவாறு வந்தனர். நேற்று மதியம் 2.30 மணி வரை இடைவிடாமல் மழை தூறிக்கொண்டே இருந்தது. சூரிய வெளிச்சமே தெரியாமல் வானில் கருமேகங்களாக சூழ்ந்து காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இரவு வரை மழை நீடித்தது.

மழையின் காரணமாக புதுக்கோட்டையில் நகரப்பகுதியில் ஆங்காங்கே சாலையோரம் ரெயின் கோட் விற்பனை அதிகமாக நடைபெற்றது. ஒரு ரெயின் கோட் ரூ.200 முதல் ரகம் வாரியாக பிரித்து வைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர். இதேபோல குடைகளும் விற்பனை களைகட்டியது.

மழையளவு விவரம்

மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- ஆதனக்கோட்டை-19, பெருங்களூர்-4, புதுக்கோட்டை-3, ஆலங்குடி-23, கந்தர்வகோட்டை-16, மழையூர்-3.60, கீழணை-7, அறந்தாங்கி-9, மீமிசல்-14.20, ஆவுடையார்கோவில்- 15.20, மணமேல்குடி-2.40, இலுப்பூர்-1.30, குடுமியான்மலை-2, உடையாளிப்பட்டி-15.50, கீரனூர்-13.10.


Related Tags :
Next Story