புதுக்கோட்டையில் பரவலாக மழை
புதுக்கோட்டையில் பரவலாக மழை பெய்தது.
வடகிழக்கு பருவ மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சாரல் மழை பெய்வதும், பகலில் வெயில் அடிப்பதுமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையும் வெயில் அடித்தது. பின் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பகல் 12.30 மணிக்கு மேல் லேசாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சிறிது நேரம் பரவலாக பெய்தது. அதன்பின் தூறிக்கொண்டே இருந்தது. மாலை 3 மணிக்கு மேல் மீண்டும் வெயில் அடித்தது.
மாணவிகள் மழையில் நனைந்தபடி...
இந்த மழையினால் சாலையில் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்தபடியும், சிலர் குடையை பிடித்தப்படியும் சென்றனர். இதேபோல சாலையில் நடந்து சென்றவர்கள் மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்தப்படி சென்றனர். கல்லூரி வகுப்பு முடிந்து வந்த மாணவிகள் பலர் மழையில் நனைந்தப்படியும், தலையை துப்பட்டாவால் மூடியபடியும், சிலர் குடைகளை பிடித்தப்படியும் சென்றதை காணமுடிந்தது.