ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பரவலாக மழை
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாரல் மழை
ராஜபாளையம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் நேற்றும் வெயில் வாட்டி வதைத்தது. பின்னர் மாலை திடீரென குளிர்ந்த காற்று வீசி சாரல் மழை பெய்ய தொடங்கியது. மேலும் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பெய்தமழையால் மழை நீர் தேங்கி நின்றது.
இதில் பஞ்சு மார்க்கெட், நேரு சிலையில் இருந்து பழைய பஸ் நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, காந்தி கலை மன்றம், சங்கரன்கோவில் மூக்கு, சொக்கர் கோவில் ஆகிய சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
அதேபோல சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சிவலிங்காபுரம், ஆகிய சுற்று வட்டார பகுதியிலும் சாரல் மழை பெய்தது.
விவசாயிகள் மகிழ்ச்சி
ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தயங்கினார்கள். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது. இந்த பலத்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
இதேபோல் சிவகாசி பகுதியிலும் மாலை நேரத்தில் மழை பெய்தது.