தஞ்சையில் பரவலாக மழை
தஞ்சையில் பரவலாக மழை
தஞ்சை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்தது. அதிலும் கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திம் தொடங்குவதற்கு முன்னதாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திர காலத்தில் இதைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என மக்கள் அச்சப்பட்டனர். கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திர காலம் தொடங்கியது. ஆனால் கடந்த சில நாட்களாக மழை அவ்வப்போது பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்தது.
தஞ்சை மாநகரில் நேற்று மழை பெய்யவில்லை என்றாலும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இல்லை. மாலை நேரத்தில் கருமேகங்கள் திரண்டு வந்தன. சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. மிதமாக இந்த மழை பெய்து கொண்டே இருந்தது. பின்னர் இடையில் சிறிதுநேரம் மழை நின்றதாலும் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்தது. இந்த மழையினால் பூமி குளிர்ந்து இரவு நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது.
நாஞ்சிக்கோட்டை பகுதியில் நேற்று மாலை பலத்த இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் நாஞ்சிக்கோட்டை சாலை முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சோளம், நிலக்கடலை, உளுந்து விதைக்கப்பட்ட வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் விதைகள் அழுகும் அபாயம் உள்ளது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.