மாவட்டத்தில் பரவலாக மழை


மாவட்டத்தில் பரவலாக மழை
x

கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு வாழை மரங்கள் சாய்ந்தன.

கரூர்

பலத்த மழை

தமிழ்நாட்டில் கோடை காலத்தில் கொளுத்திய வெயிலை போல கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானதை பார்க்க முடிந்தது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் சில இடங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதேபோல் கரூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட 103 டிகிரி வெயில் பதிவானது. கொளுத்தும் இந்த வெயிலால் பொதுமக்கள் பலர் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் கரூர் நகர்ப்பகுதிகளில் நேற்று மாலை சுமார் 3.40 மணி அளவில் திடீரென தூறல் மழை பெய்தது. சிறிது நேரத்தில் இந்த மழை பெரிய மழையாக மாறியது. சுமார் அரை மணி நேரம் தொடர்ந்து மிதமான மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நகர்ப்பகுதிகளில் உள்ள சில இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளிலும், தாழ்வான இடங்களிலும் மழைநீர் அதிகளவில் தேங்கி நின்றது. திடீரென பெய்த இந்த மழையால் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் அவதி அடைந்தனர்.

நொய்யல்

ெநாய்யல், தவுட்டுப்பாளையம், நன்செய் புகழூர், திருக்காடுதுறை, பாலத்துறை, தோட்டக்குறிச்சி, தளவாப் பாளையம், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், நடையனூர், மூலிமங்கலம், புன்னம் சத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இந்த மழையால் வாடிய பயிர்கள் துளிர்விட்டுள்ளது. இந்த மழையால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதி அடைந்தனர்.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், புகழூர், காகிதபுரம், அய்யம்பாளையம், மண்மங்கலம், கடம்பங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. பின்னர் மாலையில் கருமேகம் திரண்டு மாலை 4 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதேபோல் தளவாப்பாளையம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த காற்றால் விவசாயி ஒருவரது தோட்டத்தில் நன்கு விளைந்து இருந்த வாழைமரங்கள் சாய்ந்து விழுந்தன. காகிதபுரம் அருகே உள்ள முல்லை நகர் பகுதியில் சாலையோரத்தில் இருந்த புங்கமரம் சூறைக்காற்றுக்கு முறிந்து விழுந்த ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

வெள்ளியணை

வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, கத்தாளப்பட்டி, மணவாடி, ஜெகதாபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் வெயில் தாக்கம் இருந்து வந்தது. நேற்று மதியம் மழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.


Related Tags :
Next Story