மாவட்டத்தில் பரவலாக மழை


மாவட்டத்தில் பரவலாக மழை
x
தினத்தந்தி 16 Jun 2022 12:29 AM IST (Updated: 16 Jun 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலை சேதமானது.

பலத்த மழை

சிவகாசியில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை கடுமையான வெயில் அடித்தது. இந்நிலையில் மாலை 5 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. நகர் முழுவதும் பரவலாக பெய்த மழையால் பல இடங்களில் மழைநீர் வடிகால் நிறைந்து சாலையில் மழைநீர் ஆறாக ஓடியது.

இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்களும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை முடிந்து திரும்பிய அலுவலர்களும், அதிகாரிகளும் மழையில் நனைந்த படியே சென்றனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றதால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

பட்டாசு ஆலை சேதம்

இதற்கிடையில் சிவகாசி அருகே பேராபட்டி பகுதியில் அ.தி.மு.க பிரமுகர் நாகூர் கனிக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் நாகூர்கனி இறந்து விட்டதால் அந்த பட்டாசு ஆலையில் உற்பத்தி நடைபெறாமல் பூட்டியே கிடந்தது.

இந்நிலையில் பட்டாசு ஆலையின் சேமிப்பு அறையில் மின்னல் தாக்கியது. இதில் அந்த அறையில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறி தரைமட்டமானது. உடனே இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) முத்துக்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பட்டாசு ஆலைக்கு சென்று தீ பரவாமல் தடுத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அகழாய்வு பணி பாதிப்பு

தாயில்பட்டி கணஞ்சாம்பட்டி, கோமாளிபட்டி, வெம்பக்கோட்டை சுப்பிரமணியபுரம், சேது ராமலிங்கபுரம், மீனாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மழை பெய்தது. இதனால் அங்கு பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள் வாகனங்களில் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்ட்டனர்.

இதனால் இப்பகுதியில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் நடந்துவரும் அகழாய்வு பணியும் நிறுத்தப்பட்டு அகழாய்வு குழிகள் சேதமடையாமல் இருக்க தார்பாய் போட்டு தொல்லியல் துறை அதிகாரிகள் மூடினர். முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக வெம்பக்கோட்டை துணைமின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.

ஆலங்குளம்

அதேபோல ஆலங்குளம், ராசாப்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, கரிசல்குளம், தொம்பகுளம், கொங்கன்குளம். வலையபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. பருத்தி, சீனி அவரை, வெண்டைக்காய் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.


Related Tags :
Next Story