மாவட்டத்தில் பரவலாக மழை
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
பரவலாக மழை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக கொல்லிமலையில் 71 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு :-
கொல்லிமலை-71, சேந்தமங்கலம்-57, கலெக்டர் அலுவலகம்-39, நாமக்கல்-35, புதுச்சத்திரம்-30, மங்களபுரம்-17, மோகனூர்-14, எருமப்பட்டி-10, திருச்செங்கோடு-3, பரமத்திவேலூர்-2. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 292 மி.மீட்டர் ஆகும். இந்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
எருமப்பட்டி
இந்தநிலையில் எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இந்தநிலையில் அந்த பகுதியை சுற்றி உள்ள விவசாய நிலங்களில் நெல் நடவு செய்யும் பணி தொடங்கியது. எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி பொன்னேரி கிராமத்தில் வயலில் நெல் நடவு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சேந்தமங்கலம் ஒன்றியம் பொம்மசமுத்திரம் ஊராட்சியில் உள்ள ராயக்கோட்டையில் இருந்து சக்தி நகர் செல்லும் வழியில் சுமார் 70 அடி ஆழ விவசாய கிணறு உள்ளது. அந்த கிணற்றின் சுற்றுச்சுவர் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. சமீபத்தில் பெய்த கன மழையால் அந்த கிணறு இடிந்து விழுந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியம், சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரவிச்சந்திரன், பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த கிணற்றின் 2 திசையிலும் எச்சரிக்கை பலகை வைத்து தடுப்பு நடவடிக்கைகளை செய்தனர். மேலும் கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் அப்பகுதியினர் அந்த கிணற்றின் ஓரத்தில் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
வெண்ணந்தூர்
அதேபோல் வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருவதால் இந்த ஏரிகள் நிரம்பும் தருவாயில் உள்ளன. நேற்று இரவு பெய்த மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் வயல்களில் தண்ணீர் வடியாமல் நெல், சோளம் போன்ற அடித்து செல்லப்பட்டு சேதமாகி உள்ளன. வயல்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
மோகனூர் ஒன்றியம், அணியாபுரத்தில் இருந்து தோளூர் செல்லும் சாலையில் வடிகால் வசதி இல்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் மோகனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக அணியாபுரத்தில் இருந்து தோளூர் செல்லும் சாலையில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும் பொழுது மழைநீர் நடந்து செல்பவர்கள் மீது விழுகிறது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எப்போது மழை பெய்தாலும் இது போல் அந்த சாலையில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சி அளிக்கிறது. கொசுத்தொல்லை, துர்நாற்றம் ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.