மாவட்டத்தில் பரவலாக மழை
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அருப்புக்கோட்டை
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். அருப்புக்கோட்டையில் நேற்று காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் பிற்பகல் வேளையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன.
இதையடுத்து அருப்புக்கோட்டை, பாளையம்பட்டி, புளியம்பட்டி, காந்திநகர், ராமசாமிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். 1 மணி நேரம் நீடித்த கனமழை காரணமாக வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவியது.
கன மழை காரணமாக மதுரை ரோடு, காந்தி மைதானம், விருதுநகர் ரோடு, திருச்சுழி ரோடு, பூக்கடை பஜார் உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர், சாக்கடை நீருடன் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொதுமக்கள் சாலைகளில் சிரமத்துடன் சென்று வந்தனர்.
வத்திராயிருப்பு
அதேபோல வத்திராயிருப்பில் நேற்று முன்தினம் இரவு பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாபட்டி, தாணிப்பாறை, பிளவக்கல் அணை, சுந்தர பாண்டியம், மகாராஜபுரம், கோட்டையூர், தைலாபுரம், இலந்தைகுளம் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
மேலும் இந்த மழையானது நேற்று காலை 5 மணி வரை சாரல் மழையாக பெய்தது. திடீரென பெய்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
ஆலங்குளம்
ஆலங்குளம், மேலாண்மறைநாடு, வலையபட்டி, அருணாசலபுரம், கண்மாய்பட்டி சுண்டங்குளம், ஏ.லட்சுமிபுரம் பழையாபுரம், மேல பழையாபுரம், கொங்கன்குளம், கரிசல்குளம், சீவலப்பேரி, மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
தொடர்ந்து ஆலங்குளம் பகுதியில் மழை பெய்து வருவதால் கண்மாய்களில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. தொடர்ச்சியாக இந்த மழை பெய்ததால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
மின்னல் தாக்கி வீடு சேதம்
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் பாதிப்பு அதிக அளவில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பலத்த இடியுடன் மழை பெய்ய தொடங்கியது.
2 மணி நேரம் இந்த மழை நீடித்தது. அப்போது சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் காயாம்புநகரில் வசித்து வரும் சேர்மக்கனி என்பவரின் வீட்டின் மீது மின்னல் தாக்கியது. இதில் வீட்டின் மேல்மாடியில் அமைக்கப்பட்டிருந்த கைப்பிடி சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டின் தளமும் சேதமடைந்தது. மேலும் வீட்டின் அறையில் இருந்த சில பொருட்கள் எரிந்து நாசமானது. வீட்டில் உள்ளவர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தனர். இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த நபர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
2-வது நாளாக மழை
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு வீரர்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பலத்த மழை பெய்தது.
2-வது நாளாக சிவகாசி பகுதியில் மழை பெய்துள்ள நிலையில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது. ராஜபாளையம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.