திருச்செங்கோடு அருகே எலக்ட்ரீசியன் கொலை:கள்ளக்காதலனுடன் மனைவி கைது


திருச்செங்கோடு எலக்ட்ரீசியன் கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார். கூலிப்படையை ஏவி கணவரை தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.

நாமக்கல்

எலச்சிபாளையம்

எலக்ட்ரீசியன் கொலை

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தத்தை சேர்ந்த ஆரோன் மகன் தேவராஜ் எனற தேவா (வயது 32). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 20-ந் தேதி இரவு மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். கொலையுண்ட தேவா செல்போன் எண்ணில் யாரெல்லாம் பேசினார்கள் என்ற விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கள்ளக்காதலனுடன் மனைவி

விசாரணையில், தேவராஜின் மனைவி சரண்யா, தன்னுடைய கள்ளக்காதலனுடன் சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, தேவராஜின் நண்பர் விமல்குமார். இவர் அடிக்கடி தேவராஜின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது தேவராஜின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனை தேவராஜ் கண்டித்து வந்துள்ளார்.

இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள தேவராஜை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. தேவராஜ் இன்சூரன்ஸ் செய்து இருந்தாராம். இதனால் அவர், இறந்து விட்டால் இன்சூரன்ஸ் பணத்தை வாங்கி கூலிப்படைக்கு கொடுக்கலாம் எனவும் சரண்யா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

3 பேர் கைது

இதைதொடர்ந்து தேவராஜின் மனைவி சரண்யா, கள்ளக்காதலன் விமல்குமார், அவருடைய நண்பர் கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தேவராஜ் கொலையில் தொடர்புடைய கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகுதான், கொலை எப்படி நடந்தது. அதற்கு பணம் ஏதும் கைமாறியதா, கூலிப்படைக்கு வேறு கொலையில் தொடர்பு உள்ளதா என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story