குடும்ப தகராறில் மனைவி அடித்துக்கொலை; கணவர் கைது
குடும்ப தகராறில் மனைவி அடித்துக்கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
கீழப்பழுவூர்:
தகராறு
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 37). லாரி டிரைவர். இவரது மனைவி ஜெயசித்ரா(29). இவர்களுக்கு சாதனா (8) என்ற மகளும், சரத்குமார் (5), பர்வீன்குமார் (2) என்ற 2 மகன்களும் உள்ளனர்.
மேலும் அடிக்கடி பாலகிருஷ்ணனுக்கும், ஜெயசித்ராவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் ஜெயசித்ரா கோபித்துக் கொண்டு திருப்பூருக்கு கூலி வேலைக்கு சென்றதாகவும், பின்னர் சில நாட்கள் கழித்து பாலகிருஷ்ணன் சென்று அவரை அழைத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், ஜெயசித்ராவை தாக்கியுள்ளார். இதில் ஜெயசித்ரா உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஜெயசித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலகிருஷ்ணனை கைது செய்து அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து 3 குழந்தைகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.