கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை.. மரணத்திலும் இணை பிரியாத தம்பதி


கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை.. மரணத்திலும் இணை பிரியாத தம்பதி
x

கணவன்-மனைவி இருவரும் இறந்ததால் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். இருவரது உடல்களுக்கும் ஒன்றாக இறுதிச் சடங்கு செய்தனர்.

சென்னை:

சென்னை புறநகர்ப்பகுதியான திருவேற்காடு, கோ ஆபரேடிவ் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 72). இவருடைய மனைவி பாரதி (68). இருவரும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள். இவர்களுடைய மகன் ஜெயபிரகாஷ். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு, மணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக ஜெயபிரகாஷ், தந்தையை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கணவர் இறந்த செய்தியை கேட்ட பாரதி அதிர்ச்சி அடைந்தார். ஆஸ்பத்திரியில் இருந்து மணியின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கணவரின் உடலை பார்த்து பாரதி கதறி அழுதார். ஜெயபிரகாஷ், தனது தந்தை இறந்தது குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து கொண்டிருந்தார்.

அப்போது கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்த பாரதி, திடீரென வீட்டில் உள்ள அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

ஒரே நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் இறந்ததால் அவர்களுடைய மகன் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கினர். பின்னர் கணவன்-மனைவி இருவரது உடல்களுக்கும் ஒன்றாக இறுதிச் சடங்கு செய்தனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story