கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை


கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை
x

புதுக்கோட்டையில் குடும்ப தகராறில் கிணற்றில் குதித்து மனைவி தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் இறந்தார்.

புதுக்கோட்டை

குடும்ப தகராறு

புதுக்கோட்டை அருகே பெருஞ்சுனை குருக்காலையாப்பட்டியை சேர்ந்தவர் அடைக்கலம் (வயது 30). பொக்லைன் ஆபரேட்டர். இவரது மனைவி பிரவீணா (22). இவர்களுக்கு திருமணமாகி 1¼ ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. அடைக்கலம் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தகராறு ஏற்பட்டது. இதில் பிரவீணா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் குதித்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற கணவர் அடைக்கலம், கிணற்றில் குதித்து மனைவியை காப்பாற்ற முயன்றிருக்கிறார். இந்தநிலையில், பிரவீணா இறந்த நிலையில் அவரை காப்பாற்ற முயன்ற அடைக்கலமும் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

பிரேத பரிசோதனை

இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்த போது கணவன்-மனைவி 2 பேரும் கிணற்றில் தண்ணீரில் பிணமாக மிதந்தனர். இதுகுறித்து அப்பகுதியினர் திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். தீயணைப்பு வீரர்கள் மூலம் 2 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்ததும் அவர்களது குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டது.

கோட்டாட்சியர் விசாரணை

இதற்கிடையில் கணவன்-மனைவி இருவரும் இறந்தது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 1¼ வருடத்தில் பிரவீணா தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story