கருவை கலைக்க வற்புறுத்துவதாக போலீஸ்காரர் மீது மனைவி புகார்


கருவை கலைக்க வற்புறுத்துவதாக போலீஸ்காரர் மீது மனைவி புகார்
x

கருவை கலைக்க வற்புறுத்துவதாக போலீஸ்காரர் மீது மனைவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு முகாமில் புகார் மனு அளித்தார்.

வேலூர்

குறைதீர்வு முகாம்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று குறைதீர்வு முகாம் நடைபெற்றது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கவுதமன், கோட்டீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் புகார் மற்றும் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

பெறப்பட்ட மனுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. சில மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கருவை கலைக்க...

கணியம்பாடி அருகே உள்ள பாலாத்துவண்ணான் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எனக்கு திருமணமாகி 9 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று உள்ளது. எனது கணவர் காவல்துறையில் ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு பல பெண்களிடம் தகாத உறவு உள்ளது. மேலும் பெற்றோரிடம் சென்று பணம், நகையை வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்று கூறி என்னை அடித்து துன்புறுத்துகிறார். மேலும் எனது குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கிறார்.

நான் 2 மாத கர்ப்பமாக உள்ளேன். எனது கருவையும் கலைக்க வற்புறுத்தி, என்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். இதனால் தற்போது எனது பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனவே எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாங்கி தருவதாக மோசடி

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்த ஒருவர் அளித்துள்ள மனுவில், எனது நண்பரின் மகனுக்கு வேலை தேடிவந்தேன். அப்போது அறிமுகமான ஒருவர் தனியார் மருத்துவமனையில் வேலைவாங்கி தருவதாக கூறினார். அதற்கு பணம் செலவாகும் என்றார். இதுகுறித்து நான் நண்பரிடம் தெரிவித்தேன். பின்னர் ரூ.4 லட்சத்தையும் வாங்கிக் கொண்டார். ஆனால் வேலை வாங்கித் தராமல் காலம் கடத்தி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று குடும்ப பிரச்சினை, பணமோசடி, நிலமோசடி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர்.

---


Next Story