குடும்பத்தகராறில் கணவரை அரிவாள்மனையால் வெட்டிய மனைவி கைது


குடும்பத்தகராறில் கணவரை அரிவாள்மனையால் வெட்டிய மனைவி கைது
x

குடும்பத்தகராறில் மனைவி அரிவாள்மனையால் வெட்டினார். இதில் கணவர் பரிதாபமாக இறந்தார்.

காஞ்சிபுரம்

அரிவாள்மனை வெட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கொல்லசேரி பகுதியை சேர்ந்தவர் முருகன் (41). டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கலாவதி (35). கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மகளின் பிறந்த நாளுக்கு வீட்டில் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கலாவதி அறிவாள்மனையை தூக்கி வீசியதில் முருகனின் காலில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதை பார்த்ததும் கலாவதி அங்கிருந்து சென்று விட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் முருகனை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சாவு

அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்து போனார். இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து முருகனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாவில் சந்தேகம்

முருகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் அவரது உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்ததையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கணவனை வெட்டிய மனைவி கலாவதியை கைது செய்து விசாரித்து வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து முருகனின் உடலை எடுத்து சென்று இறுதி சடங்கு செய்தனர். மேலும் கலாவதி வெட்டியதால் முருகன் இறக்கவில்லை என்றும் அவரது சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தெரியவரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கலாவதியை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story