திருமண விழாவிற்கு சென்ற போது கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலி
பனமரத்துப்பட்டியில் திருமண விழாவுக்கு சென்ற போது கணவன் கண்முன்னே மனைவி விபத்தில் பலியானார்.
பனமரத்துப்பட்டி:
பஸ் கண்டக்டர்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சி அடிகரை பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். தனியார் பஸ் கண்டக்டர். இவருடைய மனைவி சாந்தி (வயது 45). விவசாய கூலி தொழிலாளி. நேற்று காலை 9.30 மணி அளவில் கணவன்- மனைவி இருவரும் சேலத்தில் நடைபெறும் உறவினரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தங்களது மொபட்டில் சென்றனர்.
அப்போது அவர்கள், பனமரத்துப்பட்டி காந்திநகர் காளியம்மன் கோவில் அருகில் சென்ற போது சாலையின் குறுக்கே வந்த மோட்டார் சைக்கிளும், விஸ்வநாதன் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
பலி
இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் சாந்தியின் பின்பக்க தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. விஸ்வநாதன் லேசான காயம் அடைந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர், சாந்தியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சாந்தி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த பனமரத்துப்பட்டி போலீசார் சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். திருமண வரவேற்பு விழாவுக்கு சென்றபோது விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.