போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது மனைவி பரபரப்பு புகார்

முதலிரவில் எடுத்த ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டுவதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கோவை கலெக்டர் அலுவலகத்தில் அவரது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கோவை, மே.24-
முதலிரவில் எடுத்த ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறி மிரட்டுவதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது கோவை கலெக்டர் அலுவலகத்தில் அவரது மனைவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சப்-இன்ஸ்பெக்டர் மீது புகார்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் 25 வயது இளம் பெண். இவர் நேற்று காலை கோவை கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தனது தாய் மற்றும் உறவினர்களுடன் வந்தார். அங்கு அவர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கும், கோவையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ந் தேதி உவரியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. முதலிரவு அன்று எனது கணவர் பாலில் சில மாத்திரைகளை கலந்துகொடுத்தார். நான் அதை குடித்ததும் மயங்கிவிட்டேன்.
பின்னர் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. திருமணமாகி என்னுடன் 14 நாட்கள் வாழ்ந்த எனது கணவர் கோவை செல்வதாகவும், விரைவில் உன்னை அழைத்து செல்வதாகவும் கூறி சென்றார். நானும் அதை நம்பி கணவரின் வீட்டில் தங்கி இருந்தேன்.
ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்
அதன்பின்னர் அவர் என்னை தொடர்புகொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந் தேதி என்னை தொடர்புகொண்டு பேசினார். அப்போது அவர் சில காரணங்களுக்காக உன்னை திருமணம் செய்ய வேண்டியதாயிற்று உன்னுடன் வாழ பிடிக்கவில்லை. இஷ்டம் இருந்தால் இரு. இல்லையென்றால் உனது வீட்டிற்கு சென்று விடு என்று கூறினார்.மேலும் ஏதாவது எனக்கு பிரச்சினை செய்தால் முதலிரவு அன்று எடுத்த உனது ஆபாச வீடியோக்கள் என்னிடம் உள்ளது. அதனை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நான் இதுகுறித்து எனது தாயிடம் கூறினேன்.
தோஷம் கழிக்க திருமணம்
இதையடுத்து எனது கணவரின் பெற்றோரிடம் கேட்டதற்கு எங்களது மகனுக்கு ஜாதகம் சரியில்லை. அதனால் தோஷம் கழிக்க திருமணம் செய்தோம் என்று கூறினர். எனவே தோஷம் கழிக்க திருமணம் செய்து ஏமாற்றிய கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
கோவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தோஷம் கழிய திருமணம் செய்ததாகவும், முதலிரவின் போது வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் பெண் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.