தொழிலாளி கொலையில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைது


தொழிலாளி கொலையில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைது
x

புளியங்குடி அருகே தொழிலாளி கொலையில் மனைவி கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

புளியங்குடி:

தொழிலாளி வெட்டிக்கொலை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஈசானபோத்தி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து மகன் மாரியப்பன் (வயது 39). இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கனகா (33) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலையில் மாரியப்பன் தனது மொபட்டில் பெட்ரோல் நிரப்பி விட்டு வருவதாக மனைவியிடம் ரூ.500 வாங்கி கொண்டு வெளியில் புறப்பட்டு சென்றார். பின்னர் அவர், புளியங்குடி அருகே கொல்லம்-திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து நவாச்சாலை செல்லும் வழியில் அரிவாள் வெட்டு காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரை மர்மநபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

மனைவி-கள்ளக்காதலன் கைது

இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மாரியப்பனின் மனைவி கனகாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த உறவினரான செல்லப்பா மகன் பால் வியாபாரியான விக்னேசுக்கும் (25) இடையே கள்ளக்காதல் இருந்ததும், இதனை மாரியப்பன் கண்டித்ததால், மனைவி தூண்டுதலின்பேரில், அவரை விக்னேஷ் வெட்டிக்கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ், கனகா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான விக்னேஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

ரூ.6 லட்சம் கடன்

எனது உறவினரான மாரியப்பன் பல ஆண்டுகளாக கேரளாவில் குடும்பத்துடன் தங்கியிருந்து ஓட்டல் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்பன் குடும்பத்துடன் சொந்த ஊரான வாசுதேவநல்லூருக்கு வந்தார். பின்னர் அவர் இங்குள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை செய்தார்.

நான், மாரியப்பனின் வீட்டுக்கு சென்று தினமும் பால் வழங்குவது வழக்கம். பின்னர் எனது பால் வியாபாரத்துக்காக மாரியப்பனிடம் ரூ.6 லட்சம் கடன் வாங்கினேன்.

கள்ளக்காதலை கண்டித்ததால்...

இந்த நிலையில் எனக்கும், மாரியப்பனின் மனைவி கனகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மாரியப்பன் எங்களை கண்டித்து கள்ளக்காதலை கைவிடுமாறு கூறினார். மேலும் அவரிடம் கடனாக வாங்கியிருந்த பணத்தையும் திருப்பி தருமாறு அடிக்கடி கேட்டு வந்தார். எனவே மாரியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். இதற்கு அவருடைய மனைவி கனகாவும் உடந்தையாக இருந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலையில் மாரியப்பன் மொபட்டில் பெட்ரோல் நிரப்புவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்து கனகா எனக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து நான் மோட்டார் சைக்கிளில் சென்று மாரியப்பனை சந்தித்து கடனை திருப்பி தருவதாகவும், புளியங்குடியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் இருந்து பணத்தை எடுத்து தருவதாகவும் கூறினேன்.

இதனை உண்மை என்று நம்பிய மாரியப்பன் மொபட்டில் புளியங்குடிக்கு முன்செல்ல, அவரை பின்தொடர்ந்து நான் மோட்டார் சைக்கிளில் சென்றேன். புளியங்குடி அருகே நவாச்சாலையில் ஆள்நடமாட்டம் இ்ல்லாத இடத்தில் சென்றபோது, மோட்டார் சைக்கிளை மொபட் மீது மோதவிட்டு இடித்து தள்ளினேன். இதில் நிலைதடுமாறி விழுந்த மாரியப்பனை கம்பியால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தேன்.

இவ்வாறு விக்னேஷ் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான விக்னேஷ், கனகா ஆகிய 2 பேரையும் போலீசார் சிவகிரி கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தினர். பின்னர் விக்னேசை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், கனகாவை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர். தொழிலாளி கொலையில் மனைவி, கள்ளக்காதலனுடன் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story