பேளுக்குறிச்சியில்மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனைராசிபுரம் கோர்ட்டு தீர்ப்பு
ராசிபுரம்:
பேளுக்குறிச்சியில் மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராசிபுரம் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கூலித்தொழிலாளி
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் வெள்ளையன். இவருடைய மகன் சிலம்பரசன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த சின்னையன் மகள் உமா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் உமா மகன், மகளுடன் தனியாக வசித்து வந்தார். மேலும் அவர் நாமக்கல் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட்டில் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது.
கத்திக்குத்து
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ந் தேதி வீட்டில் இருந்த உமாவை கணவர் சிலம்பரசன் ஏன் விவாகரத்து பெற்றாய் என்று கேட்டார். இதில் தகராறு ஏற்பட்டு மனைவியை அவர் கத்தியால் குத்தினார். இதுகுறித்து பேளுக்குறிச்சி போலீசார் சிலம்பரசன் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. வழக்கில் விசாரணை முடிந்து நேற்று நீதிபதி தீனதயாளன் தீர்ப்பு வழங்கினார். அதில் மனைவியை கத்தியால் குத்திய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சரவணன் ஆஜராகி வாதாடினார்.