போரூர் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரின் மனைவி தற்கொலை


போரூர் அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரின் மனைவி தற்கொலை
x

கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரின் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம், கந்தசாமி நகரைச் சேர்ந்தவர் ரவணம்மா (வயது 50). இவருடைய மகள் நிவேதா (23). இவருக்கும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது.

இவர்களுக்கு 3 வயதில் நேகா என்ற பெண் குழந்தை உள்ளது. சங்கர், டெல்லியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வருகிறார்.

திருமணத்தின்போது நிவேதாவின் பெற்றோர், வரதட்சணையாக 12 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த 3 வருடங்களாக சங்கர், கூடுதல் வரதட்சணை கேட்டு தனது மனைவி நிவேதாவை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் சங்கரின் குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரை தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து நிவேதா, தனது தாயாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திராவுக்கு சென்ற அவர், தனது மகள் நிவேதாவை காரம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

தாய் வீட்டில் வசித்து வந்த நிவேதா, நேற்று வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த வளசரவாக்கம் போலீசார், தூக்கில் தொங்கிய நிவேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வீட்டில் உள்ள அறையில் நிவேதா, தனது கைப்பட ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில் அவர், "கணவர் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து நிவேதா தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என விசாரித்து வருகின்றனர். மேலும் நிவேதாவுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Next Story