பர்கூர் மலை கிராமத்தில் ெசந்நாய் கடித்து 3 ஆடுகள் சாவு
பர்கூர் மலை கிராமத்தில் செந்நாய் கடித்து 3 ஆடுகள் செத்தன.
அந்தியூர்
பர்கூர் மலை கிராமத்தில் செந்நாய் கடித்து 3 ஆடுகள் செத்தன.
கடித்து குதறப்பட்ட ஆடுகள்
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி எலச்சிபாளையத்தை சேர்ந்தவர் மாதவன் (வயது 50). கூலித்தொழிலாளி. ஆடுகளும் வளர்த்து வருகிறார். வழக்கமாக இரவு நேரத்தில் ஆடுகளை வீட்டின் முன்பு கட்டி வைத்துவிட்டு தூங்க சென்றுவிடுவார். அதன்படி நேற்று முன்தினம் இரவும் ஆடுகளை கட்டி வைத்துவிட்டு தூங்க சென்றுவிட்டார்.
நேற்று காலை எழுந்து வாசலுக்கு வந்து பார்த்தபோது 3 ஆடுகளும் பாதி கடித்து குதறப்பட்ட நிலையில் செத்துக்கிடந்தன.
கண்ணீர் கோரிக்கை
ஆடுகள் செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாதவன் உடனே இதுபற்றி தட்டக்கரை வனச்சரக அலுவலருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறை அலுவலர்கள் அங்கு பதிவாகியிருந்த கால் தடங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் கூறும்போது 3 ஆடுகளையும் செந்நாய் கடித்து கொன்றுள்ளதாக கூறினர்.
இதையடுத்து மாதவனும் அவருடைய மனைவியும் வனத்துறையினரிடம், 'ஆடுகள் வளர்த்துதான் இதுவரை குடும்பம் நடத்தி வந்தோம். இனி என்ன செய்வது?, எங்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தரவேண்டும்' என்று கண்ணீர் விட்டார்கள்.