கிணற்றில் விழுந்து தத்தளித்த காட்டுப்பன்றி


கிணற்றில் விழுந்து தத்தளித்த காட்டுப்பன்றி
x

கிணற்றில் விழுந்து தத்தளித்த காட்டுப்பன்றி

ஈரோடு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மலை கருப்புசாமி கோவில் பகுதியில் விவசாய தோட்டங்கள் உள்ளன. இந்த இடம் வனப்பகுதியையொட்டி இருக்கிறது. அதனால் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் காட்டை விட்டு வெளியேறி உணவு தேடி தோட்டங்களுக்கு வந்து செல்லும்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு காட்டு பன்றி தோட்டத்துக்கு வந்துள்ளது. அப்போது அங்கிருந்த சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்து விட்டது. சுமார் 70 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 30 அடிக்கு தண்ணீர் இருந்தது.

தண்ணீருக்குள் விழுந்த காட்டுப்பன்றி விடிய விடிய தத்தளித்தபடியே இருந்தது. நேற்று காலை தோட்டத்தின் உரிமையாளர் சென்றபோது கிணற்றுக்குள் இருந்து தண்ணீர் சலசலக்கும் சத்தம் கேட்டது. அதனால் அருகே சென்று பார்த்தபோது காட்டுப்பன்றி தண்ணீரில் தத்தளிப்பது தெரிந்தது. உடனே இதுகுறித்து அந்தியூர் வனத்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் வனத்துறையினரின் உதவியுடன் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி காட்டுப்பன்றியை உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அந்தியூர் வனப்பகுதிக்குள் காட்டுப்பன்றியை வனத்துறையினர் விட்டனர்.


Next Story