விளைநிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்


விளைநிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 21 Aug 2023 1:00 AM IST (Updated: 21 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு பகுதியில் விளைநிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் விளைநிலங்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

கிணத்துக்கடவு பகுதியில் மரவள்ளி கிழங்கு, வாழை, தக்காளி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இதன் காரணமாக கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள கிணத்துக்கடவு, கோதவாடி, கொண்டம்பட்டி, நல்லட்டிபாளையம், தாமரைக்குளம், செட்டியக்காபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இரவு நேரங்களில் தோட்டத்திற்குள் நுழையும் காட்டுப்பன்றிகள் பயிர்களை வேரோடு சாய்த்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் நஷ்டத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கலெக்டரிடம் முறையிடுவோம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

கிணத்துக்கடவு தாலுகாவில் காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோதவாடி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வாழைக்கன்றுகளை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி உள்ளது. காட்டுப்பன்றி தொல்லை குறித்து பலமுறை வனத்துறை, வருவாய்த்துறையினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எங்களுக்கு வேதனையை தருகிறது. காட்டுப்பன்றிகளால் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தொகையும் தரவில்லை. இதுகுறித்து அடுத்த கட்டமாக வனத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story