விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
ஆனைமலை அருகே விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
ஆனைமலை
ஆனைமலை அருகே விளைநிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
நெல் சாகுபடி
ஆனைமலை ஒன்றியத்தில் நெல், தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாயம் பிரதானமாக உள்ளது. அதில் 5,400 ஏக்கரில் ஆண்டுக்கு 2 போகத்தில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. இதற்கு ஆழியாறு அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனம், பழைய ஆயக்கட்டு பாசனம் வழியாக தண்ணீர் வழங்கப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் நெல் பயிரிட்டனர். இது தற்போது நெல் அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. மேலும் விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் கடந்த 8-ந் தேதி ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்கப்பட்டது.
கவலை
இ்ந்த நிலையில் பெரியணை பகுதியில் உள்ள வயல்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து நெற்கதிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
இந்த ஆண்டு போதிய அளவில் இடுபொருட்கள் கிடைக்காததன் காரணமாக 2½ அடி வளரும் நெற்கதிர்கள் 1½ அடி வரை மட்டுமே வளர்ந்துள்ளது. இதனால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. மேலும் கால்நடைகளுக்கும் வைக்கோல் போன்ற தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இழப்பீடு வேண்டும்
இதற்கிடையில் பெரியணை உள்ளிட்ட பகுதிகளில் வயல்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து நெற்கதிர்களை சேதப்படுத்துகிறது. இதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தும், காட்டுப்பன்றிகள் கட்டுக்கடங்காமல் கூட்டம், கூட்டமாக இரவு நேரங்களில் புகுந்து நெற்கதிர்களை தொடர்ந்து நாசம் செய்கிறது. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
எனவே காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் வராமல் தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.