சோழவந்தான் அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்


சோழவந்தான் அருகே பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்
x

சோழவந்தான் அருகே பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மதுரை

சோழவந்தான்

சோழவந்தான் அருகே பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விவசாய பயிர்கள்

சோழவந்தான் வடகரை கண்மாய் தென்பகுதி பேட்டை கிராமத்தில் விவசாயிகள் சுமார் 1000 ஏக்கரில் வாழை, தென்னை, நெல் விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் இரண்டு ஆண்டுகளாக வடகரை கண்மாய் பகுதியில் சுற்றி திரியும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக விவசாயம் செய்து இருக்கக்கூடிய பகுதியில் புகுந்து வாழை, தென்னங்கன்றுகள், நெல் பயிர்கள் உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதுகுறித்து வாழை விவசாயி மோகன்ராஜ் கூறியதாவது, வடகரை கண்மாய் தென்பகுதியான பேட்டை கிராமத்தில் சுமார் 6 ஏக்கரில் வாழை விவசாயம் ரூ.6 லட்சம் செலவில் செய்து வருகிறேன். 2 ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள் அட்டகாசம் தாங்க முடியவில்லை, தினசரி வயலில் புகுந்து வாழைகளை சேதப்படுத்தி குருத்துகளை தின்றுவிட்டு வாழைகளை சேதப்படுத்தி செல்கின்றன. இதில் சில வாழைகளை திருப்பி நட்டு வைக்கிறோம். அதையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன.

காட்டுப்பன்றிகள்

இதுபோக ஊடு பயிராக நட்டு வைத்துள்ளதென்னங் கன்றில் உள்ள குருத்தையும் காட்டுப்பன்றிகள் தின்று சேதப்படுத்தி இரவு நேரங்களில் இங்கு வருவதற்கு பயமாக உள்ளது. அதிகாலையில் 2 விவசாயிகளை காட்டுப்பன்றி கடித்திருக்கிறது. இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக வருவதால் நாங்கள் இப்பகுதிக்கு வருவதற்கு அஞ்சுகின்றோம். இது குறித்து வேளாண்மை துறை, வனத்துறையிடம் பலமுறை எடுத்து கூறியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டுப்பன்றி தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் தொடர்ந்து இப்பகுதியில் வாழை, தென்னை, நெற்கதிர்களை தொடர்ந்து காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன. பயிர்கள் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அரசு வழங்க வேண்டும் என்று கூறினார்.

நடவடிக்கை

வடகரை கண்மாய் கீழ்பகுதியில் நெல் மற்றும் வாழை விவசாயம் செய்து வரும் சரவணன் கூறியதாவது, என் வயலில் ஆரம்பிக்கும் காட்டுப் பன்றிகள் ஆண்டிய மேடு வரை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக சென்று நிலத்தில் உள்ள வாழை, தென்னங்கன்றுகளையும், நெற்கதிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. இதற்காக என் வயல் அருகே கட்டு கம்பியால் பாதுகாப்பு செய்து வருகிறேன். இருந்தாலும் இந்த கம்பியையும் காட்டுப்பன்றிகள் முட்டித்தள்ளி விடுகின்றன. இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story