விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை பிடிக்க வேண்டும்
விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை பிடிக்க வேண்டும் என நெமிலியில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறை தீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் பாலசந்தர் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆனந்தன், வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கை மற்றும் குறைகள் குறித்து பேசினர். அப்போது விவசாய நிலத்தில் இரவு நேரங்களில் காட்டுபன்றிகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. வெளிநாட்டு பறவைகளும் நடவு செய்யப்பட்ட நெற்பயிரை சேதபடுத்துகின்றன.
பிடிக்க வேண்டும்
வனத்துறையினர் அவற்றை பிடிக்க முன்வரவேண்டும். ஏரி, குளம், குட்டைகளை தூர்வார வேண்டும். வேளாண்மை துறையின் மானியங்கள் குறித்து அனைத்து விவசாயிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.
மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, நெமிலி பேரூராட்சி செயல் அலுவலர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.