காட்டு யானை தாக்கி பெண் படுகாயம்
வால்பாறையில் காட்டு யானை தாக்கி பெண் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
வால்பாறை
வால்பாறையில் காட்டு யானை தாக்கி பெண் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
காட்டு யானைகள்
வால்பாறை அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் 6 பேர் சொந்த ஊருக்கு சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்கள் திரும்பி எஸ்டேட்டிற்கு வந்து உள்ளனர். சக்தி எஸ்டேட் பகுதியில் இருந்து அவர்களது எஸ்டேட் பகுதிக்கு 1 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். இதற்கிடையே தொழிலாளர்கள் நடந்து சென்ற போது, எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக நின்றிருந்தன.
இதனால் அவர்கள் அச்சம் அடைந்தனர். மேலும் தாங்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்ல முடியாமல், சக்தி எஸ்டேட் பகுதியில் தங்கி விட்டனர். இந்தநிலையில் நேற்று காலை 7 மணியளவில் தொழிலாளர்கள் 6 பேரும் தங்களது எஸ்டேட் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது 2 காட்டு யானைகள் எதிரே வந்தன. அவை திடீரென தொழிலாளர்களை துரத்தியது.
தொழிலாளி படுகாயம்
அவர்கள் காட்டு யானைகளிடம் இருந்து தப்பிக்க கூச்சலிட்டபடி அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அப்போது தொழிலாளி அமராவதி (வயது 47) என்பவரை காட்டு யானை தாக்கியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் காட்டு யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. உடனே சக தொழிலாளர்கள், எஸ்டேட் நிர்வாகத்தினர் அமராவதியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக வனத்துறையினர் படுகாயம் அடைந்த பெண் தொழிலாளிக்கு ஆறுதல் கூறினர். மேலும் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக எஸ்டேட் பகுதியில் 2 காட்டு யானைகள் சுற்றித்திரிந்து வருகின்றன. அதை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலநார், சக்தி, பிளண்டிவேலி உள்பட பல்வேறு எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.