குஞ்சப்பனையில் காட்டு யானைகள் முகாம்
கோத்தகிரி அருகே பலாப்பழ சீசன் காரணமாக குஞ்சப்பனை சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் கிராம மக்கள் தனியாக செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே பலாப்பழ சீசன் காரணமாக குஞ்சப்பனை சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் கிராம மக்கள் தனியாக செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
காட்டு யானைகள்
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை, மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஏராளமான பரப்பளவில் பலா மரங்கள் உள்ளன. இந்தநிலையில் தற்போது குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பலா மரங்களில் சீசன் காரணமாக கொத்துக் கொத்தாக பழங்கள் காய்த்து குலுங்கி வருகின்றன. இந்த பழங்களை வியாபாரிகள் கொண்டு வந்து, கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரவேனு, கொட்டக்கம்பை, முள்ளூர், குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் அடுக்கி வைத்து ரூ.100 முதல் ரூ.300 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
குஞ்சப்பனை சுற்றுவட்டார பகுதியில் பலா மரங்களில் காய்த்துள்ள பழங்களை உண்பதற்காக சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் குட்டிகளுடன் வந்து தேயிலை தோட்டங்கள்மற்றும் வனப்பகுதிகளில் முகாமிட்டு பழங்களை தின்று வருகின்றன. அவை அவ்வப்போது சாலைகளிலும் உலா வந்த வண்ணம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
தனியாக செல்லக்கூடாது
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், குஞ்சப்பனை சுற்றுவட்டார பழங்குடியின கிராமங்களில் தற்போது பலாப்பழ சீசன் காரணமாக பழங்கள் அதிகளவில் காய்த்து குலுங்குகின்றன. எனவே, பழங்களை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளி பகுதியில் இருந்து வந்து முகாமிட்டு உள்ளன. எனவே, கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் தங்களது வாகனத்தை இயக்க வேண்டும்.
சாலையின் குறுக்கே யானைகளை கண்டால் ஒலிப்பான் ஒலிப்பதை தவிர்ப்பதுடன், யானைகளுக்கு தொல்லை கொடுக்கவோ அல்லது செல்போனில் படம் பிடிக்கவோ முயற்சி செய்யக்கூடாது. இதேபோல ஆதிவாசி கிராம மக்கள் அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வீட்டை விட்டு தனியாக வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். பணிக்கு செல்லும்போது தொழிலாளர்கள் ஒன்றாக செல்ல வேண்டும். தனியாகச் செல்லக் கூடாது என்றனர்.