தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்
பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பந்தலூர்
பந்தலூர் அருகே தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
காட்டு யானைகள்
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலைக்கடை, தட்டாம்பாறை, கோட்டப்பாடி, எடத்தால், மழவன் சேரம்பாடி, ஏலமன்னா உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவை தென்னை, பாக்கு, வாழை மரங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. அவ்வப்போது வீடுகளை சூறையாடும் சம்பவமும் நடக்கிறது. சில நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகளை துரத்தி வருகிறது. வாகனங்களை வழிமறிப்பதால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அய்யன்கொல்லி அருகே தட்டாம்பாறையில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு 10 காட்டு யானைகள் திடீரென புகுந்தன. இதனால் அங்கு பச்சை தேயிலை பறித்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தேயிலை தோட்டத்தில் யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்த படி சென்றன. இதன் காரணமாக அங்கு தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. தொடர்ந்து காட்டு யானைகள் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. அதன் பின்னரே தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
பயிர்கள் சேதம்
இதேபோல் ஏலமன்னா பகுதியில் காட்டு யானைகள் புகுந்தன. அங்கு தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழை, தென்னை மரங்கள் மற்றும் பயிர்களை சேதப்படுத்தின. மேலும் யானைகள் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. இதற்கிடையே நேற்று ஏலமன்னாவில் இருந்து எலியால் கடை, மேங்கோ ரேஞ்ச், பந்தலூர் செல்லும் சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டு இருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வந்தனர்.
காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருவதால், பொதுமக்கள், தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். தகவல் அறிந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி மற்றும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கோட்டப்பாடியில் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.