மின் வேலியில் சிக்கி காட்டு யானை சாவு: தோட்ட உரிமையாளர்கள் 2 பேர் கைது
மின் வேலியில் சிக்கி காட்டு யானை இறந்தது தொடா்பாக தோட்ட உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
டி.என்.பாளையம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. இந்த வனச்சரகத்துக்குட்பட்ட சின்ன குன்றி வனப்பகுதியையொட்டி அந்த பகுதியை சேர்ந்த கெண்டன் (வயது 52), மோகன் (57) ஆகியோருடைய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அவர்கள் சாமந்தி பூ பயிரிட்டு உள்ளனர். வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க, தோட்டத்தை சுற்றிலும் அவர்கள் மின் வேலி அமைத்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வேளியேறிய ஆண் யானை ஒன்று தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி பலியானது.
இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தோட்ட உரிமையாளர்களான கெண்டன், மோகன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 'கெண்டன் என்பவருடைய தோட்டத்தில் இருந்து மின் இணைப்பு எடுத்து, அருகில் இருந்த மோகன் என்பவருடைய விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பேட்டரி மின் வேலிக்கு பயன்படுத்தியதும், அந்த மின் வேலியில் சிக்கி ஆண் யானை இறந்ததும்,' தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கெண்டன், மோகனை வனத்துறையினர் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து பேட்டரி, இரும்பு வேலி கம்பிகள் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.