காட்டு யானை நடமாட்டம்
ரன்னிமேட்டில் காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
குன்னூர்
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம், கே.என்.ஆர்.நகர், பர்லியார் ஆகிய பகுதிகளில் பலா மரங்களில் பழங்கள் காய்த்து தொங்குகின்றன. பலாப்பழ சீசன் காரணமாக, அதனை ருசிக்க சமவெளியில் இருந்து காட்டு யானைகள் அந்த பகுதிகளில் முகாமிட்டு வருகின்றன. அவை மலைப்பாதை மட்டுமின்றி, குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையிலும் நடமாடி வருகின்றன. இந்தநிலையில் குன்னூர் அருகே ரன்னிமேடு பகுதியில் உள்ள தேயிலை தோட்ட குடியிருப்பில் கடந்த 4 நாட்களாக காட்டு யானை முகாமிட்டு உள்ளது. இந்த பகுதி குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையையொட்டி உள்ளதால், அவ்வப்போது யானை சாலையில் உலா வருகிறது. அப்போது சில நேரங்களில் இருசக்கர வாகனங்களை துரத்தி வருகிறது. மேலும் இரவு நேரத்தில் ரன்னிமேடு பகுதியில் முகாமிடுகிறது. இதனால் பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். தகவல் அறிந்த வனத்துறையினர் காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து, அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் யானை ஆக்ரோஷமாக துரத்துவதால், இரவில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.