அய்யம்பாளையம் மருதாநதி அணைப்பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்


அய்யம்பாளையம் மருதாநதி அணைப்பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாட்டம்
x

அய்யம்பாளையம் மருதாநதி அணைப்பகுதியில் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் விவசாயிகள் பீதியில் உள்ளனர்.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் மருதாநதி அணை உள்ளது. கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இந்த அணை உள்ளது. அணையின் மேல்பகுதியில் பெரும்பாறை, தடியன்குடிசை, மருமலை, சேம்பிலிஊத்து, நடுப்பட்டி, பெரியூர், பள்ளத்து கால்வாய், கே.சி.பட்டி, கவியக்காடு, கானல்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் வனப்பகுதிகளில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வாழை, சவ்சவ், பீன்ஸ், மிளகு, ஆரஞ்சு, எலுமிச்சை, அவரை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை காட்டு யானை மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி மருதாநதி அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. அந்த யானை அணையின் அடிவார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள வேலியை உடைத்து உள்ளே சென்று தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளது. ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மருதாநதி அணைப்பகுதிக்கு காட்டு யானைகள் அவ்வளவு எளதில் வருவது கிடையாது. ஆனால் பல ஆண்டுகளுக்குபின் தற்போது ஒற்றை காட்டு யானை அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. எனவே அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதற்கிடையே வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார் கூறுகையில், மருதாநதி அணைப்பகுதியில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளது குறித்து தகவல் கிடைத்ததும், அங்கு வனத்துறையினர் சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடைபெற்றது. தற்போது அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது என்றார்.


Next Story