பலாப்பழம் பறித்த காட்டு யானை


பலாப்பழம் பறித்த காட்டு யானை
x
தினத்தந்தி 11 July 2023 12:45 AM IST (Updated: 11 July 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை பலாப்பழத்தை பறித்து ருசித்தது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை பலாப்பழத்தை பறித்து ருசித்தது.

காட்டு யானைகள்

பந்தலூர் அருகே அய்யன்கொல்லி, மூலைக்கடை, தட்டாம்பாறை, முருக்கம்பாடி, கோட்டப்பாடி, மழவன் சேரம்பாடி, கருத்தாடு, குறிஞ்சி நகர், சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. அய்யன்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் வாகனங்களை வழிமறித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அய்யன்கொல்லி அருகே கருத்தாடு பகுதியில் 5 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. அங்கு தோட்டங்களில் பயிரிடப்பட்டு இருந்த தென்னை, வாழை, பாக்கு மரங்கள் மற்றும் பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. பின்னர் அய்யன்கொல்லி-கொளப்பள்ளி சாலையில் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் சற்று தொலைவில் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தினர். இதையடுத்து யானைகள் அங்கிருந்து சென்ற பிறகு, வாகன ஓட்டிகள் சென்றனர்.

பலாப்பழத்தை பறித்தது

நேற்று அதிகாலையில் அதே பகுதியில் காட்டு யானைகள் மீண்டும் முகாமிட்டது. பின்னர் குடியிருப்பு பகுதியில் நின்றிருந்த பலா மரத்தில் இருந்த பலாழ்பழத்தை ஒரு யானை பறித்து தின்றது. மரத்தின் முன் கால்களை வைத்து, தும்பிக்கையால் பலாப்பழத்தை பறித்தது. இதனால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பிதிர்காடு வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதேபோல் கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.1, 2, பத்துலைன்ஸ், பாலவாடி லைன்ஸ், காவயல் பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்புகளில் யானைகள் முகாமிட்டன.

இதனால் தோட்ட தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

1 More update

Next Story