சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் காட்டு யானை-சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை


சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் ஆக்ரோஷமாக சுற்றித்திரியும் காட்டு யானை-சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Jan 2023 12:30 AM IST (Updated: 19 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் காட்டு யானை சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் பாதுகாப்பாக செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் காட்டு யானை சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் பாதுகாப்பாக செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.

யானை நடமாட்டம்

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகளும், அரிய வகை பறவை மற்றும் தாவர இனங்கள் உள்ளன. மேலும் கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இந்த நிலையில் டாப்சிலிப்பிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளில் தங்கி டாப்சிலிப்பின் இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். மேலும் வனத்துறை வாகனங்கள் மூலம் கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இந்த நிலையில் சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் தண்ணீர் பள்ளம் அருகே காட்டு யானை நீளமான தந்தங்களுடன் சுற்றி திரிந்து வருகிறது. இதன் காரணமாக தண்ணீர் பள்ளம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

வனத்துறை அறிவுரை

சேத்துமடை-டாப்சிலிப் சாலையில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்து வருகிறது. அந்த யானை இதுவரைக்கும் யாரையும் தாக்கியது கிடையாது. வாகனங்கள் வந்தால் யானை சாலையை விட்டு விலகி வனப்பகுதிக்குள் சென்று நின்று கொள்ளும். எனவே சுற்றுலா பயணிகள் யானையை பார்த்தால் சத்தம் போடுவது, அலாரம் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது.

யானை சாலையில் நின்றால் அது செல்லும் வரை பொறுமை காக்க வேண்டும். வனப்பகுதிக்குள் மெதுவாக வாகனங்களில் செல்ல வேண்டும். மேலும் டாப்சிலிப் சாலையில் வாகனங்களை நிறுத்துவது தடை செய்யப்பட்டு உள்ளது. விதிமுறைகளை மீறி வனப்பகுதிக்குள் வாகனங்களை நிறுத்துவது, வனவிலங்குகளை தொந்தரவு செய்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story