காட்டு யானைகள் அச்சத்தால் பலா மரங்களை வெட்டிய விவசாயி
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த மணியம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். விவசாயி. இவருடைய பண்ணை தோட்டத்தில் ஏராளமான பலாப்பழ மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் தற்போது பலாப்பழங்கள் அதிகளவில் காய்த்துள்ளன.
இந்த நிலையில் மணியம்பாடி அருகே ஆலள்ளி வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் உணவு தேடி வெளியேறும் காட்டு யானைகள் பண்ணை தோட்டத்திற்குள் புகுந்து அங்கு காய்த்து தொங்கும் பலா பழங்களை தின்றும், மரங்களை சேதப்படுத்தியும் வருகின்றன. மேலும் பலாப்பழங்களை தின்பதற்காக வரும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராம பகுதிகளுக்குள் நுழைந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, தக்காளி உள்ளிட்ட பயிர்களையும் சேதப்படுத்தி வந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காட்டு யானைகளால் இரவு மற்றும் பகல் நேரங்களில் அப்பகுதி கிராம பொதுமக்களும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதற்கிடையே பலா மரங்களில் காய்த்து உள்ள பழங்களை தின்பதற்காகவே காட்டு யானைகள் ஊருக்குள் வருவதாகவும், அதனால் பலா மரங்களை வெட்ட வேண்டும் என கிராம மக்கள் விவசாயியிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து விவசாயி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தனக்கு சொந்தமான 5 பலா மரங்களை அடியோடு வெட்டினார். இதேபோல அந்த பகுதியில் உள்ள பலா மரங்களையும் விவசாயிகள் காட்டு யானைகளின் அச்சத்தால் வெட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.