வால்பாறையில் தொழிலாளர்களின் வீடுகள், ரேஷன் கடையை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்


வால்பாறையில் தொழிலாளர்களின் வீடுகள், ரேஷன் கடையை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 24 Nov 2022 12:30 AM IST (Updated: 24 Nov 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் தொழிலாளர்களின் வீடுகள், ரேஷன் கடையை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் தொழிலாளர்களின் வீடுகள், ரேஷன் கடையை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

காலநிலை மாற்றத்தின் காரணமாக கேரள வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வால்பாறை வனப்பகுதிக்கு வரத்தொடங்கியுள்ளன. இவ்வாறு வரும் யானைகள் தேயிலை தோட்டங்களில் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன. இந்த யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் சிங்கோனா எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் 19 காட்டு யானைகள் புகுந்தன. இந்த யானைகள் சிங்கோனா எஸ்டேட்டில் இருந்து பெரியகல்லாறு எஸ்டேட் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தன. இதுகுறித்து அறிந்து அங்கு வந்த மானாம்பள்ளி வனச்சரகத்தினர் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.

ரேஷன் கடை, வீடுகள் சேதம்

ஆனால் யானைகள் அங்கிருந்து செல்லாமல், சாலையோரத்தில் இருந்த சிந்தாமணி ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசி மூட்டைகளை வெளியே வீசியன. பின்னர் ரேஷன் அரிசியை தின்றும், கீழே கொட்டியும் நாசம் செய்தன. பின்னர் வனத்துறையினர் விரட்டியதால், அங்கிருந்து சென்ற யானைகள் சிங்கோனா ஆஸ்பத்திரி வளாகத்தில் பின்புறத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டு வருகின்றன.

இதேபோல வாகமலை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் கூட்டம் நுழைந்தன. இந்த யானைகள் அங்கிருந்த 7 தொழிலாளர்கள் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்தின. சத்தம்கேட்டு வந்த தொழிலாளர்கள் கூச்சல்போட்டு காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர்.

பொதுமக்கள் பீதி

வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில், தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தேயிலை பறிக்க செல்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இரவு, அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.


Next Story