சோலாடி ஆற்றில் குளித்த காட்டு யானைகள்


சோலாடி ஆற்றில் குளித்த காட்டு யானைகள்
x

சேரம்பாடி அருகே சோலாடி ஆற்றில் குளித்த காட்டு யானைகளால், தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி அருகே சோலாடி பகுதிக்குள் 4 காட்டு யானைகள் புகுந்தன. தொடர்ந்து அங்கு குடியிருப்புகளை முற்றுகையிட்டன. பின்னர் அங்கிருந்து யானைகள் கோழிக்கோடு செல்லும் சாலையில் உள்ள சோலாடி போலீஸ் சோதனைச்சாவடி அருகே பாலத்தில் முகாமிட்டன. இதனால் இரவு பணியில் ஈடுபட்ட போலீசார் பீதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி உத்தரவின்படி, வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டினர். அங்கிருந்து சென்ற யானைகள் நேற்று சோலாடி ஆற்றங்கரையில் நின்றன. பின்னர் ஆற்றுக்குள் இறங்கி யானைகள் உற்சாக குளியல் போட்டன. இதையடுத்து ஆறு வழியாக கேரள மாநில எல்லைக்குள் நுழைந்தது. ஆற்றில் குளித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் காட்டு யானைகள் வர உள்ளதால், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story