பந்தலூர் அருகே குடியிருப்புகளை காட்டு யானை முற்றுகை-வாகன ஓட்டிகளை விரட்டியதால் பரபரப்பு


பந்தலூர் அருகே குடியிருப்புகளை காட்டு யானை முற்றுகை-வாகன ஓட்டிகளை விரட்டியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 May 2023 11:30 AM IST (Updated: 4 May 2023 11:31 AM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்டு காட்டு யானை வாகன ஓட்டிகளை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

பந்தலூர்

பந்தலூர் அருகே குடியிருப்புகளை முற்றுகையிட்டு காட்டு யானை வாகன ஓட்டிகளை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாகன ஓட்டிகளை விரட்டியது

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெலாக்கோட்டையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பாட்டவயல்-கூடலூர் செல்லும் சாலையில் உலா வந்தது. அப்போது வழியாக 2 சக்கர வாகனங்களில் வந்த வாகன ஓட்டிகளை அந்த யானை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்த யானை பின்னர் நெலாக்கோட்டை புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள குடியிருப்புகளை முற்றுகையிட்டது இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் வீடுகளைவிட்டு வெளியே செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள் சேதம்

மேலும் அந்த யானை குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை காலால் மிதித்து துவம்சம் செய்தது. இதுபற்றி அறிந்ததும் பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ்பிரவீன்ஷன் வனகாப்பாளர் மில்டன்பிரபு மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு சென்று, குடியிருப்பு பகுதியில் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானையை விரட்ட முயன்றனர். அப்போது வனத்துறை வாகனத்தையும் அந்த காட்டு யானை துரத்தியது. சுதாகரித்து கொண்ட பட்டாசுகள் வெடித்து காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

தொடர்ந்து காட்டுயானை அட்டகாசம் செய்துவருவதால் பொதுமக்களும் வியாபாரிகளும் பீதி அடைந்துள்ளனர். காட்டு யானையை நிரந்தரமாக விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story