அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு
மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,
மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டு யானைகள்
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது. இந்த சாலையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி கோவையில் இருந்து மஞ்சூருக்கு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
கெத்தை பகுதியில் குட்டிகளுடன் 5 காட்டு யானைகள் நடமாடின. தொடர்ந்து அந்த வழியாக வந்த அரசு பஸ்சை வழிமறித்தன. யானைகள் ஒரு மணி நேரம் சாலையில் நின்றதோடு, பஸ்சுக்கு வழிவிடாததால் பயணிகள் அச்சமடைந்தனர். அதன் பின்னர் யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் நேற்று முன்தினமும் மாலை 6 மணி அளவில் குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டம் அந்த சாலையில் முகாமிட்டது.
அறிவிப்பு பலகைகள்
இதனால் வாகனங்கள் சற்று தொலைவில் நிறுத்தப்பட்டது. இருப்பினும், சாலை குறுகலாக உள்ளதால், வாகனங்களை பின்னோக்கி இயக்குவது சிரமமாக உள்ளது. காட்டு யானைகள் சாலையோரம் உள்ள மரக்கிளைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பலகைகள் உடைத்து துவம்சம் செய்தன. பின்னர் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதும், வாகனங்கள் சென்றன. மஞ்சூர் அருகே கெத்தை சாலையில் கடந்த 4 நாட்களாக மஞ்சூர், ஒக்க நாடு, கெத்தை, பெரும்பள்ளம், முள்ளி சோதனைச்சாவடி வரை காட்டு யானைகள் உலா வருகின்றன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், காட்டு யானைகள் மஞ்சூர்-கோவை சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். யானையுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுக்கக் கூடாது. அதேபோல் அதிகமாக சத்தம் எழுப்பி யானைகளை இடையூறு செய்யக்கூடாது. குறிப்பாக யானைகள் சாலையில் நிற்கும் போது வாகனங்களில் சாலையை கடக்க முயற்சி செய்யக்கூடாது. யானைகள் சென்ற பின்னர் தான் சாலையை கடக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.