டீக்கடை மேற்கூரையை உடைத்த காட்டு யானைகள்
வால்பாறையில் டீக்கடை மேற்கூரையை உடைத்த காட்டு யானைகளால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.
வால்பாறை,
வால்பாறை அருகே உள்ள அய்யர்பாடி எஸ்டேட் ஜேயி பங்களா தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்தன. அங்குள்ள கார்த்திகேயன் என்பவரது டீக்கடையின் மேற்கூரை ஓடுகளை உடைத்து, துதிக்கையை உள்ளே நுழைத்து பொருட்களை எடுக்க முயற்சித்தன. இதுகுறித்து தோட்ட தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இருப்பினும், யானைகள் அய்யர்பாடி எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு வருவதால், அச்சத்துடன் வசித்து வருகின்றனர். வால்பாறை வனச்சரக வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இரவில் தோட்ட தொழிலாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.