தேவர்சோலை அருகே ஊருக்குள் வரும் காட்டு யானைகள்:அகழி அமைப்பதாக அதிகாரிகள் உறுதி


தேவர்சோலை அருகே ஊருக்குள் வரும் காட்டு யானைகள்:அகழி அமைப்பதாக அதிகாரிகள் உறுதி
x

பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட கிராம மக்கள்.

தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலை அருகே காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்தனர்.

நீலகிரி

கூடலூர்: தேவர்சோலை அருகே காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிராம மக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்தனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

கூடலூர் தாலுகா தேவர்சோலை சுற்று வட்டார பகுதிகளான மச்சிக்கொல்லி, அஞ்சு குன்னு, மட்டம், செட்டியங்காடி, வட்டிக்கொல்லி, ஒற்றவயல் உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் தினமும் ஊருக்குள் வருகின்றன. தொடர்ந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களை உடைத்து சேதப்படுத்துகிறது.

மேலும் தென்னை, பாக்கு மரங்கள் மற்றும் பயிர்களை நாசம் செய்து வருகிறது. பகல் நேரத்திலேயே காட்டு யானைகள் ஊருக்குள் வந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மச்சிக்கொல்லி பகுதியில் காட்டு யானை புகுந்தது. பின்னர் பொதுமக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. அப்போது மொய்தீன் குட்டி என்பவரது வீட்டின் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியை உடைத்து சேதப்படுத்தியது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

ஏற்கனவே அதே பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மொய்தீன் குட்டி காரை காட்டு யானை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் காட்டு யானைகள் தொடர்ந்து ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தகவல் அறிந்த கூடலூர் உதவி வன பாதுகாவலர் கருப்பையா, போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், வனச்சரகர் ராதாகிருஷ்ணன், தேவர்சோலை தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் வனத்துறையினர், போலீசார் விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தேவர்சோலை பேரூராட்சி துணைத்தலைவர் யூனைஷ்பாபு, ஆதிவாசிகள் நல சங்க நிர்வாகி சுரேஷ் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதைத்தொடர்ந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க பாதுகாப்பு மற்றும் ரோந்து பணி தீவிரமாக மேற்கொள்ளப்படும். மேலும் அகழி தோண்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர்.


Next Story