தென்னை, வாழையை சேதப்படுத்திய காட்டு யானைகள்


தென்னை, வாழையை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x

ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் தென்னை, வாழையை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

திண்டுக்கல்

செம்பட்டி அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில், கடந்த 2 நாட்களாக 2 யானைகள் முகாமிட்டு அட்டகாசம் செய்கின்றன. இவை இரவு நேரத்தில் அங்குள்ள தோட்டங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. பகலில் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் பதுங்கி கொள்கின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நரசிங்கபுரத்தை சேர்ந்த தங்கபாண்டி என்பவரின் தோட்டத்துக்குள் யானைகள் புகுந்தன. அங்கிருந்த 25-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தின. இதேபோல் அவரது தோட்டத்தில் உள்ள வாழை மரங்களையும் சேதப்படுத்தி விட்டு, அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னிவாடி வனத்துறையினர் யானைகள் சேதப்படுத்திய இடங்களை நேற்று பார்வையிட்டனர். கால் தடங்களை வைத்து தென்னை மற்றும் வாழைகளை சேதப்படுத்தியது யானைகள் என்றும், வனப்பகுதியில் பதுங்கிய அவை எழுப்பிய சத்தத்தை வைத்து பெண் யானைகள் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே விவசாயிகள், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பதுங்கியுள்ள யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story