வீடுகளை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்


வீடுகளை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் வீடுகளை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை,

வால்பாறையில் வீடுகளை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் செய்தததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

காட்டு யானைகள் முகாம்

வால்பாறை வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அடிக்கடி உணவுத்தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. சில நேரங்களில் கேரள வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் காட்டு யானைகளும் தேயிலை தோட்ட பகுதிகளில் முகாமிட்டு அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. மேலும் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டு வருகின்றன.

வீடுகள், கடைகளை உடைத்து அட்டகாசம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பன்னிமேடு எஸ்டேட் முதல் பிரிவு பகுதிக்குள் இந்த காட்டு யானைகள் புகுந்தன. அங்கு தேயிலை தோட்ட அதிகாரி வீட்டின் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் பஜார் பகுதிக்குள் நுழைந்து கடைகள், வீடுகளை சேதப்படுத்தின.

இதற்கிடையில் சத்தம் கேட்டு எழுந்த தொழிலாளர்கள், வெளியே வந்து பார்த்தனர். அப்போது காட்டு யானைகள் அட்டகாசம் செய்து கொண்டிருந்தன. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சத்தம் எழுப்பி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தொடர்ந்து வனப்பகுதியில் நின்றுகொண்டிருந்த காட்டு யானைகள் நேற்று மதியம் 2.30 மணிக்கு பன்னிமேடு எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தன. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓடினர். தொடர்ந்து காட்டு யானைகள் தேயிலை தோட்டப்பகுதி வழியாக முடீஸ் சோலையாறு நகர் செல்லும் சாலை வழியாக வனப்பகுதிக்குள் சென்றன. காட்டு யானைகள் அங்கு முகாமிட்டு வருகின்றன.

பொதுமக்கள் பீதி

குடியிருப்பு பகுதி அருகே காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளதால், எப்போது வேண்டுமானலும் குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு அந்த பகுதியில் முகாமிட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

வனத்துறையினர் எச்சரிக்கை

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், கேரள வனப்பகுதியில் இருந்து வரக்கூடிய காட்டு யானைகள் பன்னிமேடு எஸ்டேட் பகுதி வழியாகவே வரத்தொடங்கி வருவதால் பன்னிமேடு எஸ்டேட் பகுதி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இரவில் கவனமாக இருக்கவும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story