அரசு பள்ளிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்


அரசு பள்ளிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:30 AM IST (Updated: 30 Nov 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே சிங்கோனா அரசு பள்ளிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளன.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே சிங்கோனா அரசு பள்ளிக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளன.

காட்டு யானைகள் அட்டகாசம்

காலநிலை மாற்றத்தின் காரணமாக கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறை வனப்பகுதிக்கு வரும் காட்டு யானைகள், வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு நிற்கின்றன. இந்த யானைகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சத்துடனே வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள சிங்கோனா அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டு யானைகள் புகுந்தன. பின்னர் தலைமை ஆசிரியரின் அறை கதவை உடைத்து அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தின.

வனத்துறையினரை விரட்டின

தொடர்ந்து பள்ளி ஆய்வகத்தின் கதவு, ஜன்னலை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை காட்டு யானைகள் வெளியே எடுத்து வீசி நாசம் செய்தன. மேலும் மாணவ-மாணவிகளின் பள்ளி கழிவறை கதவையும், தண்ணீர் குழாயை உடைத்து அட்டகாசம் செய்தன.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், பள்ளிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காட்டு யானைகள் வனத்துறையினரை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு காட்டு யானைகளை வனப்பகுதியில் விரட்டினர்.

பொதுமக்கள் பீதி

தொடர்ந்து அந்த காட்டு யானைகள் பள்ளி வளாகத்திற்கு அருகே உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு உள்ளன. இதனால் காட்டு யானைகள் மீண்டும் பள்ளி மற்றும் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குடியிருப்பு அருகே காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story