பழங்குடியின கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள்
கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே பழங்குடியின கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
பலாப்பழ சீசன்
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை, மாமரம், கீழ்கூப்பு, மேல்கூப்பு, தட்டப்பள்ளம், கோழிக்கரை, முள்ளூர், அறையூர், கரிக்கையூர், செம்மனாரை உள்ளிட்ட கிராம பகுதிகளில் ஏராளமான பரப்பளவில் விவசாயிகள் பலா மரங்களை பயிரிட்டு உள்ளனர். இந்த பலாப்பழங்களை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சீசன் காரணமாக பலாப்பழங்கள் கொத்துக் கொத்தாக காய்த்து தொங்குகின்றன.
இதனை உண்பதற்காக சமவெளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் முள்ளூர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையோரங்களில் முகாமிட்டு உள்ளன. அவை அவ்வப்போது சாலைகளில் உலா வருவதுடன், அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ள பழங்குடியின கிராமத்துக்குள் புகுந்து விடுகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு கோழிக்கரை கிராம பகுதியில் குட்டிகளுடன் காட்டு யானைகள் உலா வந்தன.
காட்டு யானைகள்
இதனால் அப்பகுதி ஆதிவாசி மக்கள் அச்சமடைந்தனர். அவர்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காட்டு யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன. மேலும் கோழிக்கரை மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களிலும் பலாப்பழ சீசன் காரணமாக காட்டு யானைகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் தொடர்ந்து உலா வந்த வண்ணம் உள்ளன.
இதனால் தொழிலாளர்கள் பணிக்குச்செல்லவும், மாணவ-மாணவிகள் பள்ளிக்குச்செல்லவும், அத்தியாவசிய தேவைகளுக்கு கிராம மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, யானைகள் ஊருக்குள் வராத வகையில் அகழி வெட்டவோ அல்லது யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.