ஓவேலியில் காட்டு யானைகள் முகாம்-தோட்டத் தொழிலாளர்கள் அச்சம்


ஓவேலியில் காட்டு யானைகள் முகாம்-தோட்டத் தொழிலாளர்கள் அச்சம்
x
தினத்தந்தி 25 July 2023 7:30 PM GMT (Updated: 25 July 2023 7:31 PM GMT)

ஓவேலியில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

ஓவேலியில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

காட்டு யானைகள் கூட்டம்

கூடலூர் தாலுகா பகுதியில் பலாப்பழ சீசன் காணப்படுவதால் காட்டு யானைகள் ஊருக்குள் வரும் சம்பவங்கள் அதிகளவு நடக்கிறது. இதனால் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக பல இடங்களுக்கு இடம் பெயர்கிறது. மேலும் மழைக்காலமும் தொடங்கி விட்டதால் காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

கூடலூர் அருகே கோக்கால் மலையடிவாரத்தில் காட்டு யானைகள் கூட்டம் கடந்த சில வாரங்களாக முகாமிட்டிருந்தது. தொடர்ந்து இரவில் கெவிப்பாரா, பாலவாடி, சூண்டி உள்பட பல இடங்களில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து தென்னை, பாக்கு உள்ளிட்ட விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. மேலும் கூடலூர்- ஓவேலி செல்லும் சாலையில் வந்து அடிக்கடி நின்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

முகாம்- அச்சம்

இந்த நிலையில் காட்டு யானைகள் கூட்டமாக இடம் பெயர்ந்து ஓவேலி பாரம் எஸ்டேட் 8-ம் நெம்பர் பகுதியில் நேற்று காலையில் முகாமிட்டது. இதனால் பச்சை தேயிலை அறுவடை செய்யும் பணிக்காக வந்த தோட்டத் தொழிலாளர்கள் காட்டு யானைகள் கூட்டம் நிற்பதை கண்டு அச்சமடைந்தனர். தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.

இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் தொழிலாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் இரவில் தனியாக வெளியே நடந்து செல்லக்கூடாது. வேலைக்கு செல்லும் போது கூட்டமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து யானைகள் அங்கிருந்து சென்றது.



Next Story