அரசு பஸ்சை வழிமறித்த காட்டு யானைகள்
மஞ்சூர்-கோவை சாலையில் சென்ற அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்தது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி வழியாக கோவை மாவட்டம் காரமடைக்கு சாலை செல்கிறது. சமீப நாட்களாக அடர்ந்த வனப்பகுதியையொட்டி உள்ள சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் நேற்று மாலை கோவையில் இருந்து மஞ்சூருக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர். கெத்தை அருகே அரசு பஸ் சென்ற போது, 5 காட்டு யானைகள் பஸ்சை திடீரென வழிமறித்தது. யானைகள் சாலையின் குறுக்கே நின்றது. இதனால் டிரைவர் சிறிது தொலைவுக்கு முன்பே பஸ்சை நிறுத்தினார். யானைகள் வழிமறித்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். சுமார் ½ மணி நேரத்துக்கு பின்னர் காட்டு யானைகள் சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் அரசு பஸ் அங்கிருந்து மஞ்சூருக்கு சென்றது. காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகனங்களை மிகவும் எச்சரிக்கையுடன் கவனமாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கூடலூர் அருகே பார்வுட் பகுதியில் காட்டு யானைகள் புகுந்தது. அங்கு சுரேந்திரன் என்பவரது வீட்டின் சுவரை உடைத்தது. இதனால் வீட்டின் ஒரு பகுதி சுவர் சேதமடைந்தது. தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் சத்தம் போட்டு காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர். காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.